மரம் வளருங்கள் என்றும், இல்லையெனில் புவிவெப்பம் கூடி பனிமலைகள் உருகி உலகம் அழியும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அபாய அறிவிப்பு செய்கிறார்கள்.
பெட்ரோல் விலை கூடிக்கொண்டே போகிறது . அதைக் குறைக்க கையாலாகாத அரசு என்று மக்கள் ஆளும் மத்திய அரசைச் சபிக்கிறார்கள்.மாநில அரசுகள் பெட்ரோல் மீது விதிக்கும் வரியைக் குறைத்தால் மக்களுக்கு வசதியாக இருக்கும் என்று மாநில அரசுகள் மீது மத்திய அரசு குற்றம் சுமத்துகிறது.
கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பு. எனவே திட்டங்கள் அனைத்தும் கிராமப்புற மக்களை மனதில் கொண்டே தீட்டப்பட வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகிறார்கள். அரசும் கண்துடைப்பாக அதுதான் சரி என்கிறது. ஆனால், நடைமுறையில் அப்படியில்லை என்பதுதான் உண்மை.
பெட்ரோல் டீஸல் இறக்குமதியில் அந்நியச் செலாவணி அள்ளிக்கொண்டு போகிறது என்று அரசாங்கம் அலறுகிறது. கிராமங்களில் மக்கள் வேலை கிடைக்காமல் வறுமையில் வாடுகிறார்கள் என்று அரசு கொண்டு வந்ததே ஒரு திட்டம் ! அடடா ! என்னே ஒரு தொலைநோக்குப் பார்வை! 'நூறு நாள் வேலை திட்டம்' என்று உற்பத்தி சாரா இனத்தில் கோடிக்கணக்கில் செலவிட்டு கடன் சுமையில் நொந்து கிடக்கிறது.
விவசாயத்தில் லாபம் இல்லாததால் வறுமையால் சூழப்பட்டு ,விவசாய இடங்களை மனையிடங்களாக மாற்றுபவர்களிடத்தில் தங்கள் விளைநிலங்களை பறிகொடுத்து ,விவசாயிகள் வாழ்க்கை நடத்துவதும், நிலங்கள் கான்க்ரீட் காடுகளாக மாறுவதும் நமக்குப் புதிய செய்தி அல்ல.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள வேலையில்லா திண்டாட்டம், பெட்ரோல் டீஸல் விலையேற்றம், அந்நியச் செலாவணி குளறுபடி, விவசாயத் தொழில் சரிவு முதலிய சர்வ ரோகங்களுக்கும் நிவாரணி ஒன்றுதான்!!!
தென்னை மரங்கள் !
கற்பகத்தரு என்று சும்மாவா சொன்னார்கள் நம் முன்னோர்கள்! தேங்காயிலிருந்து பயோடீசல் எனப்படும் எரிபொருளை பிலிப்பைன்ஸ் ,மலேசியா போன்ற நாடுகள் தயாரித்துக் கொண்டிருக்கின்றனர். நமது நாட்டில் அரசு இதற்கு அனுமதி அளித்தால் , தேங்காய்க்கு எப்போதும் நல்ல விலை கிடைக்கும். இதனால் , இந்திய விவசாயிகள் மேலும் மேலும் மரங்களை பராமரித்து மகசூலை இரண்டு மூன்று மடங்காக அதிகப்படுத்தும் சாத்தியம் உண்டு. தரிசு நிலங்களே இல்லாத அளவுக்கு தென்னை மரங்களைப் பயிரிட்டு மரம் வளர்ப்பில் ஒரு அற்புதத்தையே நிகழ்த்தி நாட்டை குளுமையான சோலையாக மாற்றிவிடுவார் நம் விவசாயிகள்.
கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு அற்புத செய்தி என்னவெனில் , ஒரு தொழிலதிபருக்கு லாபம் கிடைத்தால் அவர் இன்ன பிற லாபம் ஈட்டக்கூடிய தொழில்களில் கவனம் செலுத்துவார். ஒரு விவசாயி லாபம் ஈட்டினால் அவர் விவசாயத்தில்தான் மீண்டும் மீண்டும் முதலீடு செய்வார். விளைவு? உணவு உற்பத்திப் பெருக்கம். எத்தனை தொழில்கள் வந்தாலும் விவசாயமே முதன்மையானதாக விளங்க வேண்டும்.அப்போது நாட்டின் முனேற்றம் உறுதி செய்யப்படும்.
சரி, இந்த பயோடீசல் தயாரிப்பு அரசுக்கு தெரியாதா என்ன?! நம் மத்திய அரசு விலையேற்றத்தை எப்போதும் ஆதரிப்பதில்லை(?!) உணவுப்பொருளாக விளங்கும் தேங்காயின் விலை உயர்வை மக்கள் எப்படி தாங்கிக்கொள்வார்கள் என்று அரசு அஞ்சுகிறது போலும்!
மக்கள் தேங்காயை உணவுப் பொருளாகச் சேர்க்கும் விகிதத்தை விட எரிபொருள் பயன்பாடு பன்மடங்கு அதிகமாகும். இந்த ஆரோக்கியமான விலையேற்றத்தை மக்கள் ஆதரிப்பரே தவிர எதிர்க்க மாட்டர்.
பயோடீசல் உற்பத்தி நடைமுறைக்கு வந்தால்
- எரிபொருள் இறக்குமதி வெகுவாகக் குறையும்
- அந்நியச் செலாவணி மிச்சப்படும்
- எரிபொருள் விலை கட்டுக்குள் வரும்
- பயோடீசல் எரிபொருள் என்பதால் சுற்றுச்சூழல் மாசுபடாது
- இதனால் புவிவெப்பம் மட்டுப்படும்
- உணவுப் பெருக்கம் ஏற்படும்
- வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியும்
- இந்தியா உலக அரங்கில் உயர்ந்து நிற்கும்!
கண்ணுக்கு முன் தெரியும் இந்த சர்வரோக நிவாரண திட்டத்தை கிடப்பில் போட, சில அரசியல்வாதிகள் வெளிநாட்டிடமிருந்து கையூட்டுப் பெற்றுக்கொண்டிருகின்றனர். தேவையில்லாமல் எரிபொருளை இறக்குமதி செய்து மக்களையும் நாட்டையும் சுரண்டும் இந்த அரசா மக்கள் நல அரசு?
இந்தத் திட்டத்தை ஆதரிக்க தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யவும். நன்றி!

நல்ல கருத்துக்கள் மச்சி...
ReplyDeleteThnks yaar! First time as per ur wish , published an article in Tamil :)
Delete